குமரியில் ரப்பர் விலை தொடர் சரிவு


குமரியில் ரப்பர் விலை தொடர் சரிவு
x
தினத்தந்தி 16 Dec 2021 11:43 PM IST (Updated: 16 Dec 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் கிலோ ரூ.16 குறைந்துள்ளது.

குலசேகரம், 
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் கிலோ ரூ.16 குறைந்துள்ளது.
ரப்பர் விவசாயம்
குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ரப்பர் தோட்டங்களை நம்பி ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் ரப்பர் ஷீட்டின் விலை முக்கிய பங்கு வகிக்கிறது. ரப்பரின் விலை, ஒவ்வொரு நாளும் கேரள மாநிலம் கோட்டயம் சந்தையில் தீர்மானிக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால், உற்பத்தி குறைந்து ரப்பர் ஷீட்டின் விலை அதிகரித்து வந்தது. 
கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி, ஆர்.எஸ்.எஸ்.4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.186 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 கிேலா ரூ.184 ஆகவும், ஐ.எஸ்.எஸ். கிலோ ரூ.170.50 ஆகவும் இருந்தது. 
விலை குறைகிறது
தற்போது மழை தணிந்துள்ள நிலையில் ரப்பரின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் இதன் விலை கிலோவிற்கு ரூ.16 குறைந்துள்ளது. நேற்று கோட்டயம் சந்தையில் ஆர்.எஸ்.எஸ், கிலோ ரூ.171 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 கிலோ ரூ.168 ஆகவும், ஐ.எஸ்.எஸ். கிலோ ரூ.154.50 ஆகவும் இருந்தது.
ரப்பரின் இந்த திடீர் விலை சரிவு குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது. இது குறித்து குலசேகரத்தை சேர்ந்த ரப்பர் விவசாயி ஒருவர் கூறியதாவது:-ரப்பருக்கு கடந்த மாத இறுதியில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நல்ல விலை கிடைத்தது. அப்போது மழைகாரணமாக ரப்பர் பால்வெட்டும் தொழில் நடைபெறவில்லை. தற்போது மழை தணிந்து ரப்பர் ஷீட்டுகளை உற்பத்தி செய்து வருகிறோம். அதே வேளையில் விலை உயர்வின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தற்போது விலை சரிந்து வருவது வருத்தம் அளிக்கிறது, என்றார்.

Next Story