போனில் உதவி கேட்ட மூதாட்டிக்கு செயற்கை கால். அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
மூதாட்டிக்கு செயற்கை கால்
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மேலபுலம்புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயமணி. மூதாட்டியான இவர் கடந்த மாதம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை போனில் தொடர்பு கொண்டு சர்க்கரை நோய் காரணமாக தனது இடது கால் முட்டிக்கு கீழே எடுக்கப்பட்டுவிட்டது. எனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அன்றைய தினமே அமைச்சர் காந்தி மூதாட்டி வீட்டுக்கு சென்று மூதாட்டியின் பிரச்சினைகளை கேட்டறிந்து கலெக்டர் பாஸ்கரன் பாண்டியனிடம் மூதாட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி செய்ய கேட்டுக்கொண்டார். அதன்பேரில் சென்னையில் இருந்து மூதாட்டியின் வீட்டிற்கு செயற்கைக்கால் வழங்குதல் மற்றும் வல்லுனர்கள் மூதாட்டியின் காலை பார்வையிட்டு காலின் அளவுகளை அளந்து எடுத்து சென்று, செயற்கை கால் தயாரிக்கப்பட்டது. அதனை நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேரடியாக மூதாட்டியின் வீட்டிற்கே சென்று காலை பொருத்தினார். அவருக்கு மூதாட்டி நன்றி தெரிவித்தார்.
இந்த நவீன செயற்கை கால் 900 கிராம் சிலிக்கான் ரப்பர் மூலம் ரூ.78 ஆயிரத்தில் செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. அப்போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஞானசேகரன், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story