எருமப்பட்டி பகுதியில் அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு-மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்


எருமப்பட்டி பகுதியில் அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு-மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 16 Dec 2021 11:59 PM IST (Updated: 16 Dec 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி பகுதியில் அரசு பள்ளிகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.

எருமப்பட்டி:
கலெக்டர் ஆய்வு
கொரோனா தொற்று காரணமாக கடந்த 1½ ஆண்டாக பள்ளிகள் செயல்படவில்லை. ஆன்லைன் மூலமாகவும், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஒளிப்பரப்பு வாயிலாகவும் மட்டுமே மாணவ, மாணவிகள் கல்வி கற்று வந்தனர். இந்த நிலையில் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பெருமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு செய்தார்.
கல்வி திறன்
தொடர்ந்து அவர், பள்ளியில் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் வழங்கப்பட்டு உள்ள கற்றல் உபகரணங்களை பார்வையிட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களிடம் பாடப்புத்தகங்களை வாசிக்க செய்து கல்வி திறனை பரிசோதித்தார். மேலும் அப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்காக சமைக்கப்பட்ட மதிய உணவை பார்வையிட்டார். அரிசி, பருப்பு, கொண்டை கடலை உள்ளிட்ட உணவுப்பொருட்களின் இருப்பை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கைகாட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்ந்து உள்ளதை பார்வையிட்டு, வகுப்பு வாரியாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். அப்போது கணக்கு போட சொல்லி, சரியாக உள்ளதா? என்றும், புத்தகங்களை வாசிக்க சொல்லி, வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.


மாணவ, மாணவிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அறிவு மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும் கல்வி கற்பிக்குமாறு ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார். மேலும் போட்டி நிறைந்த உலகத்தில் தங்களிடம் படித்த மாணவ, மாணவிகள் சாதனையாளர்களாக, வெற்றியாளர்களாக உருவாகும் வகையிலும் தங்களது திறன் முழுவதையும் பயன்படுத்துமாறு ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் உடன் இருந்தார்.

Next Story