விவசாயிகளின் பயிர்க்கடன் போராட்டத்தை பா.ஜ.க. முன்னின்று நடத்தும்-மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு


விவசாயிகளின் பயிர்க்கடன் போராட்டத்தை பா.ஜ.க. முன்னின்று நடத்தும்-மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 16 Dec 2021 11:59 PM IST (Updated: 16 Dec 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் பயிர்க்கடன் போராட்டத்தை பா.ஜ.க. முன்னின்று நடத்தும் என கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

நாமக்கல்:
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் விவசாய பயிர்க்கடனை உடனடியாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் தமிழக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ள விவசாய பயிர்க்கடன்களை உடனடியாக வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் மற்றும் விவசாய நகை கடன்களை விதிமுறை மீறல் என கூறி, தற்போதைய அரசு திருப்பி செலுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதை தொடர்ந்து விவசாய முன்னேற்ற கழகத்தினர் மற்றும் விவசாயிகள் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் மனு அளித்தனர்.
அண்ணாமலை பேட்டி
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் பயிர்க்கடன் உள்ளிட்ட உரிமைகளுக்காக சாலையில் நின்று விவசாயிகள் போராடி வருகிறார்கள். இதை பா.ஜ.க. கடுமையாக கண்டிக்கிறது. மேலும் விவசாயிகளின் பயிர்க்கடன் போராட்டத்தை பா.ஜ.க. முன்னின்று நடத்தும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடும் என்றார். 
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். பா.ஜ.க. அதை விரும்பாது. கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தார்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. ஏட்டிக்கு போட்டியாக அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு முந்தைய அரசின் ஆணையை மதிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது. 
அதனால் புதிதாக எந்த விவசாயியும் பயிர்க்கடனை வாங்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் தத்தளித்து வருகின்றனர். எனவே ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து, உடனடியாக புதிய பயிர்க்கடனை வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டும். வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். இல்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி கோட்டையை நோக்கி செல்வோம். 
அமைச்சர்களுக்குள் குழப்பம்
மத்திய அரசு எப்போதும் அரசியல் பார்க்காது. எதிர்க்க வேண்டும் என்பதற்காக தி.மு.க.வினர் அனைத்தையும் எதிர்க்கின்றனர். புதிய கல்வி கொள்கை விஷயத்தில் தமிழக அமைச்சர்கள் ஆளுக்கொரு முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவர்களுக்குள் குழப்பம் உள்ளது. இந்த மோதல் போக்கை கைவிட்டு, மத்திய அரசு திட்டங்களை சார்ந்து போனால் சாதாரண மக்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் செல்வகுமார், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட, பேரூர், ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கையில் கரும்பு ஏந்தி கலந்து கொண்டனர்.

Next Story