வேலூர் நகைக்கடை கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம். வடக்கு மண்டல ஐ.ஜி. பேட்டி.


வேலூர் நகைக்கடை கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம். வடக்கு மண்டல ஐ.ஜி. பேட்டி.
x
தினத்தந்தி 17 Dec 2021 12:00 AM IST (Updated: 17 Dec 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு நகைகளை திருடிச்சென்ற கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம்’ என்று நகைக்கடையில் ஆய்வு செய்து ஊழியர்களிடம் விசாரணை நடத்திய வடக்கு மண்டல ஐ.ஜி.சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

வேலூர்

‘வேலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு நகைகளை திருடிச்சென்ற கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம்’ என்று நகைக்கடையில் ஆய்வு செய்து ஊழியர்களிடம் விசாரணை நடத்திய வடக்கு மண்டல ஐ.ஜி.சந்தோஷ்குமார் தெரிவித்தார். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட ‘விக் மேன்’ உருவப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

நகைகள் கொள்ளை

வேலூர்-காட்பாடி செல்லும் சாலையில் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே பிரபலமான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இந்த கடையின் பின்புறத்தில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

15 கிலோ தங்க நகைகள், அரை கிலோ வைரநகைகள் கொள்ளைபோனது. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடையில் வேலைபார்க்கும் ஊழியர்கள், பாதுகாவலர்கள், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் நகைக்கடையில் நேற்றும் 2-வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பணியில் இருந்தவர்கள் யார்?, விடுமுறையில் உள்ளவர்கள் குறித்த பட்டியலையும் போலீசார் பெற்று விசாரணை நடத்தினர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

இந்த நிலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேற்று நகைக்கடைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து பின்னர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, விழுப்புரம் டி.ஐ.ஜி. பாண்டியன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

கடையில் விசாரணை மேற்கொண்ட ஐ.ஜி., பின்னர் அதன் அருகே உள்ள காலி இடத்தை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொள்ளையன் தப்பிச்சென்ற வழி மற்றும் தீ வைத்து தடயங்களை மறைத்த இடம் போன்றவற்றை பார்வையிட்டார்.
பின்னர் வடக்குமண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடமாநில கொள்ளையர்களா?

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த ஒரு நபர் நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்கனவே நடந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இதில் ஈடுபட்டார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம்.
மேலும் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கொள்ளையன் உருவப்படம் வெளியீடு

நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த உருவப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், நகைக்கடைக்குள் வரும் நபர் முகத்தில் சிங்கத்தின் படம் பதித்த முகமூடி மற்றும் தலையில் விக் (தலைமுடி) அணிந்துள்ளார். கையில் பெயிண்ட் ஸ்பிரேயும் வைத்துள்ளார். கொள்ளையன் தனது அடையாளத்தை மறைக்க இவற்றை பயன்படுத்தி உள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

நகைக்கடையின் தென்பகுதியில் உள்ள காலி இடத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட விக், கொள்ளையன் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த ‘விக் மேன்’ யார்? என்பதை கண்டுபிடிக்க வேலூர் நகரில் முகமூடி விற்பனை செய்யும் கடைகள், விக் விற்பனை செய்யும் கடைகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story