கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி


கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 17 Dec 2021 12:16 AM IST (Updated: 17 Dec 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி

சூரமங்கலம், டிச.17-
சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணற்றில் மூழ்கி பலி
சேலம் மாமாங்கம் அருகே பெரிய மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் அஜித்குமார் (வயது 12), சூரமங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் அஜித்குமார் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று மதியம் அஜித்குமார் மற்றும் இவரது அக்காள் மோனிகா ஆகியோர் அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்தனர், அப்போது அஜித்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்ற போது தவறி விழுந்தான். இதில் தண்ணீரில் மூழ்கி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தான்.
உடலை மீட்கும் பணி
இதைப்பார்த்த மோனிகா அலறியடித்து ஊருக்குள் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 7 பேர், சேலம் மேற்கு போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மாணவனின் உடலை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். கிணறு மிகவும் ஆழமாக இருந்ததால் மாலை 3 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி இரவு 7 மணி வரை நடைபெற்றது. எனினும் மாணவனின் உடலை மீட்க முடியவில்லை.
சாலை மறியல்
இதனிடையே இருட்டி விட்டதால் மீட்பு பணியை தொடர முடியவில்லை. இதனால் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மாணவனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பலியான மாணவன் அஜித்குமாரின் உடலை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரி நேற்று இரவு 8.10 மணிக்கு சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாணவனின் உடலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அங்கு 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடல் மீட்பு
அதன்பிறகு மீண்டும் தீயணைப்புத் துறையினர் மற்றும் சூரமங்கலம் போலீசார் மின் விளக்கு வெளிச்சத்தில் மாணவனின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவு 9.50 மணிக்கு பலியான அஜித்குமார் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாணவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story