சமையல் மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை


சமையல் மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 17 Dec 2021 1:05 AM IST (Updated: 17 Dec 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

காதலியை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த சமையல் மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர், 

விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழங்குடி பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய இளம்பெண். 10-ம் வகுப்பு வரை படித்த இவர், அதன் பிறகு கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு அந்த இளம்பெண்ணின் பெற்றோர், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அவர், கோயம்புத்தூரிலேயே தொடர்ந்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து உறவினர்களை பார்த்து சென்றார்.
இந்த நிலையில் கோ.பவழங்குடியை சேர்ந்த காசிலிங்கம் மகன் சமையல் மாஸ்டரான ராமதாஸ் (26) என்பவருடன், அந்த இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. பின்னர் இளம்பெண், வேலைக்கு செல்லாமல் தனது சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

பாலியல் பலாத்காரம்

கடந்த 26.10.2016 அன்று இரவு ராமதாஸ், இளம்பெண்ணை தனது நண்பரின் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு ராமதாசும், இளம்பெண்ணும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது ராமதாஸ், திடீரென இளம்பெண்ணின் வாயில் துணியை வைத்து திணித்து, பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதுபற்றி அவர், ராமதாசிடம் கூறியதும், அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு, கர்ப்பத்தை கலைத்து விடும்படியும், இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி இளம்பெண், தனது உறவினரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

கொலை மிரட்டல்

இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் ராமதாஸ் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அவரது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு ராமதாஸ், அவரது தந்தை காசிலிங்கம் (56), தாய் ராயம்மா (50), அக்காள் சரஸ்வதி (32), அண்ணன்கள் குப்புசாமி (37), பழனிவேல் (29), தங்கை விஜயலட்சுமி (25) ஆகியோர் அந்த இளம்பெண்ணையும், அவரது உறவினர்களையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த இளம்பெண், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ராமதாஸ் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

10 ஆண்டு சிறை

இதில் அனைத்து சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து, இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்ட ராமதாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் காசிலிங்கம், ராயம்மா ஆகியோருக்கு தலா ரூ.4 ஆயிரமும், சரஸ்வதி, குப்புசாமி, பழனிவேல், விஜயலட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.7 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story