கும்பகோணத்தில் உறவினர்கள் மறியல்
பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்ததை கண்டித்து கும்பகோணத்தில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்ததை கண்டித்து கும்பகோணத்தில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெண் குழந்தை பிறந்தது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆட்டோ நகர் பகுதியை சேர்ந்த சுகுமாரன்- ரமா தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான ரமாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் ரமாவை கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து குழந்தையை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவு கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது.
மறியல் போராட்டம்
இதனை டாக்டர்கள் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையின் இறப்பிற்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிய போக்கே காரணம் எனக்கூறி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குழந்தையின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story