களக்காடு அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு


களக்காடு அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 17 Dec 2021 2:11 AM IST (Updated: 17 Dec 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே குளிர்பானம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீசினார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 52). இவர் அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன் சதிஷ் (25). இவர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சதிஷ், லெட்சுமணன் கடைக்கு சென்று பணம் கொடுக்காமல் குளிர்பானம் கேட்டார். ஆனால், லெட்சுமணன் குளிர்பானம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சதிஷ் ஆத்திரம் அடைந்து லெட்சுமணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் சதிஷ் மீண்டும் லெட்சுமணன் கடைக்கு வந்தார். அப்போது லெட்சுமணன் கடையில் இல்லை. அவரது மனைவி சுப்புலெட்சுமி வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். சதிஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை எடுத்து மளிகை கடையின் மீது வீசினார். இதில் குண்டு வெடித்து கடையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது.

இதை பார்த்ததும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களும், சுப்புலெட்சுமியும் அதிர்ச்சி அடைந்தனர். பொருட்கள் வாங்க வந்தவர்கள் அலறியடித்து ஓடினர். பெட்ரோல் குண்டு வீசியதில் கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சதிஷை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story