சட்டசபையில் காங்.-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கடும் அமளி
மராட்டிய அமைப்பினர் கன்னட கொடியை எரித்ததை கண்டித்து காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கர்நாடக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூரு:மராட்டிய அமைப்பினர் கன்னட கொடியை எரித்ததை கண்டித்து காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கர்நாடக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
தூண்டி விடுகிறார்கள்
கர்நாடக சட்டசபையில் நேற்று முதலில் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் அன்னதாணி எழுந்து பேசியதாவது:-
பெலகாவியில் மராட்டிய அமைப்பினர் கன்னட கொடியை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதன் மூலம் கன்னடர்களின் உணர்வுகளை தூண்டி விடுகிறார்கள். கன்னடர்கள் மென்மையான குணம் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இந்த கன்னட கொடிக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உள்ளது. கன்னட கொடிக்கு தீ வைப்பது, எனது தாய்க்கு தீ வைப்பது போல் ஆகும்.
கடிவாளம் போட வேண்டும்
எல்லை பிரச்சினையில் ஏற்கனேவ எம்.இ.எஸ். அமைப்பினர் கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இப்போது கன்னட கொடியை தீயிட்டு எரித்துள்ளனர்.
இதை நாம் சகித்துக்கொள்ள வேண்டுமா?. கன்னடர்கள் யார் என்பதை நாம் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இவ்வாறு தான் நம்மை சீண்டி பார்த்து கொண்டே இருப்பாா்கள். எம்.இ.எஸ். அமைப்பினருக்கு கடிவாளம் போட வேண்டும்.
இவ்வாறு அன்னதாணி பேசினார்.
இதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளிக்க முயற்சி செய்தார். ஆனால் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். மராட்டிய அமைப்பினரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
மராட்டிய மொழி
இந்த கடும் அமளிக்கு இடையே பா.ஜனதா உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத்னால் பேசுகையில், "கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்தபடி மராட்டிய மேம்பாட்டு வாரியத்தை விரைவாக அமைக்க வேண்டும். சத்ரபதி சிவாஜி, அவுரங்கசீப், அக்பர் போன்றவர்களுக்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் செய்தார். அவர் இந்து மதத்தை காக்க போராடினார். அதனால் மராட்டிய மேம்பாட்டு வாரியத்தை அமைத்து அதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும். அந்த வாரியத்திற்கு தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், "மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி உள்ளது. தற்போது மேல்-சபை நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், நிதி ஒதுக்க முடியவில்லை. முதல்கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி மராட்டிய மக்களின் மேம்பாட்டிற்கு தான் பயன்படுத்தப்படும். மராட்டிய மொழிக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட மாட்டாது" என்றார்.
உள்ளே அனுமதிக்கவில்லை
இதற்கிடையே 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் மாநில பா.ஜனதா அரசை கண்டித்து சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் டிராக்டரில் சுவர்ண சவுதாவுக்கு பேரணியாக வந்தனர். அதனால் அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த விஷயத்தை சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்வைத்து, காங்கிரஸ் தலைவர்களை உள்ளே அனுமதிக்குமாறு வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். ஜனதா தளம் (எஸ்), காங்கிரஸ் உறுப்பினர்களின் தர்ணாவால் சபையில் கடும் அமளி உண்டானது. இதனால் சபையை சபாநாயகர் சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story