நெல்லையில் முககவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்


நெல்லையில் முககவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 17 Dec 2021 2:32 AM IST (Updated: 17 Dec 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் தொற்று எதிரொலியாக நெல்லையில் முககவசம் அணியாமல் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

நெல்லை:
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்து இருந்தார்.

அதாவது அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கும் வணிக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.  

அதன்படி நெல்லை மாநகர பகுதியில் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இன்று முதல் (வெள்ளிக்கிழமை) முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக கூறினர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கினர். 

நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகில், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசார் பஸ்களை நிறுத்தி, பயணிகளிடம் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கினர். 

நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சோதனைச்சாவடியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான குழுவினர் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். 



Next Story