நெல்லையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


நெல்லையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 17 Dec 2021 2:45 AM IST (Updated: 17 Dec 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் 2 பொதுத்துறை வங்கிகளும், ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார் மயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதனை கண்டித்தும், வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசு, வங்கிகள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 400 வங்கி கிளைகளை சேர்ந்த 3 ஆயிரத்து 500 ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நெல்லை மாநகரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. சில வங்கிகள் முன்,  `வங்கிகள் மூடப்பட்டுள்ளன' என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்கு வங்கிக்கணக்கில் செல்லான் கட்டும் பணி, வங்கி வரைவோலை எடுக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டன.

இதையொட்டி பாளையங்கோட்டை இந்தியன் வங்கி கிளை முன்பு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர், அதிகாரிகள் சங்கங்களை சேர்ந்த திலகர், எட்வின், சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அப்போது வங்கி தனியார் மயமாக்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களை சேர்ந்த 9 சங்கங்கள் பங்கேற்றன.

Next Story