பொங்கல் பரிசு தொகுப்புக்காக ஆவின் நிறுவனம் மூலம் ரூ.130 கோடிக்கு நெய் கொள்முதல் பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தகவல்


பொங்கல் பரிசு தொகுப்புக்காக ஆவின் நிறுவனம் மூலம் ரூ.130 கோடிக்கு நெய் கொள்முதல் பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:45 AM IST (Updated: 17 Dec 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு தொகுப்புக்காக ஆவின் நிறுவனம் மூலம் ரூ.130 கோடிக்கு நெய் கொள்முதல் பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தகவல்

கிருஷ்ணகிரி, டிச.17-
பொங்கல் பரிசு தொகுப்புக்காக ஆவின் நிறுவனம் மூலம் ரூ.130 கோடிக்கு நெய் கொள்முதல் செய்யப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் கூறினார்.
அமைச்சர் நேரில் ஆய்வு 
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் உற்பத்தி, பால் பொருட்கள் விற்பனை குறித்த செயல்பாடுகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கிருஷ்ணகிரி ஆவினில் பால் குளிரூட்டும் பிரிவு, நெய், வெண்ணெய் உற்பத்தி பிரிவு, பால் பதப்படுத்தும் பிரிவு, பால் பவுடர் வைப்பு அறை மற்றும் இதர பால் பொருட்கள் உற்பத்தி பிரிவுகளை அமைச்சர் நாசர் பார்வையிட்டு பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.
தொடர்ந்து ஆவின் பாலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பால் உற்பத்தி பொருட்களை அவர் பார்வையிட்டார். பின்னர் துணைப்பதிவாளர்கள், மார்க்கெட்டிங் பிரிவு, கொள்முதல், பால் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் இதர தொழில்நுட்ப பிரிவுகளில் உள்ள அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் நாசர் பங்கேற்று ஆவின் நிறுவனம் லாபகரமாக இயங்க பல்வேறு ஆலோசனை வழங்கினார்.இதையடுத்து அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பால் கொள்முதல் 
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பால் வளத்துறையை நஷ்டத்திலிருந்து மீட்டு லாபகரமாக இயக்குவதற்கும், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் தரமான பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் கிடைக்கவும் அறிவுரை வழங்கி உள்ளார்.
அந்த வகையில் மாநில அளவில் நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்ததை 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 27 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய உத்வேகம் 
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் திறன் கொண்ட பால் பவுடர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. பாக்கெட் பால், பால் பவுடர், தயிர், மோர், வெண்ணெய், பால்கோவா, நெய், குல்பி, பாதாம் பவுடர் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் உபபொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்றியம் பிரிக்கப்பட்ட பிறகு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 79 ஆயிரத்து 500 லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 23 ஆயிரத்து 500 லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த 15 நாட்களில் கிருஷ்ணகிரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வது என்றும், நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து அலுவலர்களும் புதிய உத்வேகத்துடன் பணியாற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இனிப்பு கொள்முதல் 
முதல்-அமைச்சர், பொதுமக்களின் நலன் கருதி பாக்கெட் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்த பிறகு ஒன்றியத்தின் பால் விற்பனை 19 ஆயிரத்து 500 லிட்டரில் இருந்து 22 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒன்றியத்தின் வருவாய் மாதம் ஒன்றிற்கு ரூ.42 லட்சம் அதிகரித்துள்ளது.
2020-ம் ஆண்டு மாநில அளவில் தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்பு வகைகள் ரூ.53 கோடி விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 18 நாட்களில் ரூ.85 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.130 கோடி நெய் கொள்முதல் 
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதில் ஆவின் நிறுவனத்தின் மூலம் ரூ.130 கோடி அளவிற்கு நெய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் உள்ள அங்காடிகளில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெருமளவில் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குனர் சுப்பையன், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், ஆவின் பொது மேலாளர் வசந்தகுமார், ஆவின் தலைவர் குப்புசாமி, துணை பதிவாளர்கள் நாகராஜ், கோபி, விக்னேஷ் மற்றும் துணை பதிவாளர்கள், மேலாளர்கள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story