மணலியில் மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது
மணலியில் மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்து விபத்தில் அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
மணலி பெரியதோப்பு சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரூக் பாஷா (வயது 48). இவர், மணலி பஸ் நிலையம் அருகில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டின் வரண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வீட்டின் உள் அறையில் இருந்து கரும்புகையுடன் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தீ மளமளவென பரவியதால் உயிரை காப்பாற்றி கொள்ள அனைவரும் வெளியே ஓடிவந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
மணலி, மாதவரம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் எரிந்த தீயை ஒரு மணிநேரம் போராடி அணைத்தனர். எனினும் தீ விபத்தில் அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story