கயத்தாறு அருகே வெறிநாய்கள் கடித்து 50 ஆடுகள் பலி
கயத்தாறு அருகே ஒரு வாரத்தில் வெறிநாய்கள் கடித்து 50 ஆடுகள் பலியாகி உள்ளன
கயத்தாறு:
கயத்தாறு அருகே ஒரு வாரத்தில் வெறிநாய்கள் கடித்து 50 ஆடுகள் பலியாகி உள்ளன. இது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
செம்மறி ஆடுகள்
கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு அரசன்குளம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலா 200 முதல் 500 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் ஆடுகளை ஊருக்கு மேற்கே தனியாக காட்டிற்குள் கிடைகள் அமைத்து, ஆடுகள் மற்றும் குட்டிகளை பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சுப்புராஜ் என்பவரின் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த கிடைக்குள் திடீரென்று வெறிநாய்கள் புகுந்து ஏழு ஆடுகளை கடித்து கொன்றன. இந்த நாய்கள் ஆடுகளின் கழுத்தைக் கடித்து ரத்தத்தை குடித்து கொல்வதாக தெரிய வந்துள்ளது.
50 ஆடுகள் பலி
மேலும் அதே கிராமத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முருகன் என்பவருக்கு சொந்தமான 10ஆடுகள், சுடலை என்பவருக்கு சொந்தமான 8 ஆடுகள், உலகநாதன் என்பவருக்கு சொந்தமான 8 ஆடுகள், வே. முருகன் என்பவருக்கு சொந்தமான 18ஆடுகள் என 50-க்கும் மேற்பட்டு ஆடுகளை வெறிநாய்கள் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
கயத்தாறு கால்நடை மருத்துவர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடம் சென்று இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
விவசாயிகள் கோரிக்கை
தொடர்ந்து வெறிநாய்களால் ஆடுகள் பலியாகி வருவது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தினர் இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி வெறிநாய்கள் நடமாட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பலியான ஆடுகளுக்கு அரசு நிவாரணம் பெற்றுத்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story