நீலகிரி பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க அரசுக்கு பரிந்துரை
நீலகிரி பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க அரசுக்கு பரிந்துரை
ஊட்டி
நீலகிரியில் விளைவிக்கப்படும் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலாமேரி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து பெற்ற கோரிக்கை மனுக்கள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
நீலகிரியில் நுண்ணீர் பாசன திட்டம் தொடர்பான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டது. உரிய தெளிவுரைகள், பணி ஆணை வழங்கிய உடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசுக்கு பரிந்துரை
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க அரசுக்கு அனுப்பப்பட்ட கருத்துரு பரிசீலனையில் உள்ளது. விரைவில் அரசாணை வெளியிடப்படும். குன்னூர் அருகே எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. அங்கு நில மாறுதலுக்கான முன் அனுமதி பெற்ற பின்னர் பணிகள் தொடங்கப்படும்.
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் தொகையில் 25 சதவீதம் இயற்கை உரமாகவோ அல்லது ரசாயன உரமாகவோ வழங்கப்படுகிறது. இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி மின் பகிர்மான வட்டத்துக்கு 79 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மானியத்தில் வேளாண் கருவிகள்
கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டு கன்று, பசுமாடு வழங்க வழிவகை செய்யப்படும். வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தில் பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story