நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
கூடலூர்
எந்திரங்கள் பற்றாக்குறை காரணமாக நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
நெல் சாகுபடி
கூடலூர் பகுதியில் உள்ள தொரப்பள்ளி, அள்ளூர் வயல், குனில்வயல், புத்தூர்வயல், பாடந்தொரை மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நாட்டு ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும், விவசாயி கள் நெல் நாற்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து பருவமழை பெய்ததால் நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரானது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் விளைந்த நெற்கதிர்கள் கீழே விழுந்து முளைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
விவசாயிகள் தவிப்பு
இதனால் மழை நின்றால் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்றநிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 வாரமாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. ஆனால் வயல்கள் தொடர்ந்து சேறும் சகதியுமாக இருப்பதால் அறுவடை செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
அதுபோன்று அறுவடை செய்யும் எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக சமவெளியில் இருந்து அறுவடை எந்திரம் வரும். ஆனால் தற்போது வரை அவை வரவில்லை. இதனால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அறுவடை எந்திரங்கள்
வழக்கமாக தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து அறுவடை எந்திரங்கள் கூடலூர் பகுதிக்கு வந்து செல்லும். ஆனால் நடப்பாண்டில் இதுவரை அறுவடை எந்திரங்கள் வரவில்லை. இதனால் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
ஆட்களை வைத்து அறுவடை செய்யலாம் என்றால் தொழிலாளர்கள் கிடைப்பது இல்லை. அப்படி கிடைத்தாலும் கூலி உயர்வு காரணமாக சம்பளம் கொடுக்க முடியவில்லை. எனவே வேளாண் பொறியியல் துறை சார்பில் நெல் அறுவடை எந்திரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story