ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேந்திரம் ரக வாழை நாற்று உற்பத்தி


ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேந்திரம் ரக வாழை நாற்று உற்பத்தி
x
தினத்தந்தி 17 Dec 2021 9:08 PM IST (Updated: 17 Dec 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேந்திரம் ரக வாழை நாற்று உற்பத்தி

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேந்திரம் ரக வாழை நாற்று உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

வாழை நாற்று 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள திசு வளர்ப்பு கூடத்தில் வாழை நாற்றுகள் திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதலில் சோதனை அடிப்படையில் வளர்க்கப் பட்டு தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யப்பட்டது. 
நல்ல விளைச்சலை தந்ததால் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அதிக எண்ணிக்கையில் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இங்கு தற்போது ஜி-9 ரக 3,000 வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. 

இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 

விற்பனைக்கு தயார்

தாவரவியல் பூங்காவில் ஜி-9 ரக வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு 1 லட்சம் நாற்றுகள் விற்பனை செய்யப் பட்டது. கோவை மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் வாங்கினார்கள். 

அடுத்த ஆண்டு 1 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் 50 ஆயிரம் ஜி-9 ரக நாற்றுகள், 50 ஆயிரம் நேந்திரம் ரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நேந்திரம் நாற்றுகள் கூடலூர் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட உள்ளது. 

முதலில் சோதனை அடிப்படையில் திசு வளர்ப்பு கூடத்தில் பராமரிக்கப்படுகிறது. தற்போது 3 ஆயிரம் ஜி-9 ரக நாற்றுகள் ஒன்று ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story