மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேனர் கிழிப்பு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேனர் கிழிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 10:07 PM IST (Updated: 17 Dec 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேனர் கிழித்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேனர் கிழித்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பேனர் கிழிப்பு

திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகளில் 9-வது மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவண்ணாமலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

அந்த பேனரில் பாரத பிரதமரை விமர்சிக்கும் வகையில் கார்ட்டூன் படம் ஒன்று இருந்துள்ளது. இன்று மாலை சுமார் 6 மணியளவில் இதனை கண்ட பா.ஜ.க.வினர் பேனரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அங்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பேனர் இறக்கப்பட்டு அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அந்த பேனரை சிலர் கிழித்து உள்ளனர். இதையடுத்து அவர்கள் சென்று விட்டனர்.

சாலை மறியல் 

இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேனரை கிழித்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் இருந்த திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அங்கிருந்து கலைந்து வந்த அவர்கள் இரவு 9 மணிக்கு மேலும் கிழிக்கப்பட்ட பேனர் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story