விழுப்புரம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாாித்து வருகின்றனா்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே ஆழியூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக கூலி வேலைக்கு சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த அந்த வாலிபரின் உடல் அருகில் மதுபாட்டில்கள் மற்றும் விஷ பாட்டிலும் கிடந்தது. பின்னர் அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், விழுப்புரம் அருகே வளவனூர் தொட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 22) என்பதும், இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு புதுச்சேரி மாநிலம்
திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பாததும் தெரியவந்தது.
இந்த சூழலில் சக்திவேல், கரும்பு தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக அவரை யாரேனும் கரும்பு தோட்டத்திற்கு அழைத்து வந்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தனரா அல்லது சக்திவேல் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story