தேர்தல் வாக்குறுதிகளை தி மு க நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சியில் அ தி மு க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தேர்தல் வாக்குறுதிகளை தி மு க நிறைவேற்றக்கோரி  கள்ளக்குறிச்சியில் அ தி மு க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:20 PM IST (Updated: 17 Dec 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகளை தி மு க நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சியில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் அ தி மு க வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்


கள்ளக்குறிச்சி

ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெட்ரோல்-டீசல் விலையின் மீதான மாநில அரசின் வரி, நீட் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத தி.மு.க. அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். கழக வழிகாட்டு குழு உறுப்பினர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு கண்டன உரையாற்றும் போது கூறியதாவது:-

விலைவாசி உயர்வு

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் ஆங்காங்கே கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெட்ரோல்-டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 

தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களிடத்தில் ஓட்டு வாங்கி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மக்களுக்கான திட்டங்களை தி.மு.க. செயல்படுத்த வில்லை. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளகுறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கியதோடு, புதிய கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

எண்ணற்ற திட்டங்கள்

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்காக எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.காமராஜ், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, கதிர்.தண்டபாணி, நகர மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு நன்றி கூறினார்.

இதற்கிடையே அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட செயலாளர் குமரகுரு உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story