விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி சொத்துகள் மீட்பு
விருத்தாசலத்தில் ஆக்கிரமித்து இருந்த விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன. இந்த இடத்தை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூபாய் பல கோ டி மதிப்பிலான இடங்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இது குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிபபு கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டு இடம் மீட்கப்பட்டன.
இதேபோல் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து இருந்த விருத்தாசலம் எருமனூர் ரோடு, ஆதி கொளஞ்சியப்பர் கோவிலுக்கு அருகிலுள்ள 6 ஏக்கர் நிலம், கோ.பொன்னேரி பகுதியில் உள்ள 1½ ஏக்கர் நிலம் மற்றும் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள குமாரதேவர் மடத்திற்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலம், அரசு அச்சகம் பின்புறம் உள்ள 1½ ஏக்கர் நிலம் என சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான 9½ ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த இடங்களுக்குள் யாரும் செல்லக் கூடாது என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இடங்களை இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் பரணிதரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கம்பி வேலி
அப்போது அவர், மீட்கப்பட்ட இடங்களை சுற்றி கம்பி வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அங்கிருந்த கோவில் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது விருத்தகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, கணக்கர் பார்த்தசாரதி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story