வேலூர் தனியார் மருத்துவமனையில் வேலூரில் நக்சலைட் ஆதரவாளர் கைது?. ஜார்கண்ட் போலீசார் அதிரடி


வேலூர் தனியார் மருத்துவமனையில் வேலூரில் நக்சலைட் ஆதரவாளர் கைது?. ஜார்கண்ட் போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 17 Dec 2021 11:18 PM IST (Updated: 17 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்க்க வந்த மகன் ஜார்கண்ட் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் நக்சலைட் ஆதரவாளரா? என வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்

 வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்க்க வந்த மகன் ஜார்கண்ட் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் நக்சலைட் ஆதரவாளரா? என வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஜார்கண்ட் மாநில வாலிபர் கைது

வேலூர், ஆற்காடு சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஜார்கண்ட் மாநிலம் லேதிஹர் கிராமத்தை சேர்ந்த ராம்பிரசாத் யாதவ் (வயது 54) என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவருக்கு உதவியாக அவரது மகன் வீரேந்திரகுமார்யாதவ் (34) இருந்துள்ளார். 
இந்தநிலையில் நேற்று மருத்துவமனையில் ஜார்கண்ட் மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுலால்குமார் தலைமையிலான 5 போலீசார் கொண்ட குழுவினர் வீரேந்திரகுமாரை திடீரென கைது செய்தனர். பின்னர் அவரை வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீசார் கூறியதாவது:-

கொலை வழக்கு

கைது செய்யப்பட்ட நபர் மீது கட்டப்பஞ்சாயத்து, கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. அவரை ஜார்கண்ட் மாநில போலீசார் தேடி வந்தனர். தலைமறைவான அவர் வேலூரில் உள்ளதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து வேலூர் வந்த ஜார்கண்ட் மாநில போலீசார், வீரேந்திரகுமார் யாதவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை ஜார்கண்ட் மாநிலத்திற்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாளை (இன்று) அவரை வேலூரில் இருந்து அழைத்து செல்ல உள்ளனர். பாதுகாப்பு கருதி அவரை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நக்சலைட் ஆதரவாளரா?

ஜார்கண்ட் மாநில போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் பெயர் அன்ஸ்குமார். இவரை தேடி வந்தோம். வேலூரில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் இங்கு அவரை கைது செய்துள்ளோம் என்றனர். வேலூர் போலீசார் அவரது பெயர் வீரேந்திர குமார் யாதவ் என்று கூறுகிறார்களே? என்றும், அவர் நக்சலைட் ஆதரவாளர், மாவோயிஸ்டு என்றும் கூறுகிறார்களே? என்று கேட்டதற்கு அவர்கள் பதில் தெரிவிக்கவில்லை.

இதனால் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story