குமரியில் களை கட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை; கடை வீதிகளில் மக்கள் கூட்டம்
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியுள்ளது. புத்தாடை வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியுள்ளது. புத்தாடை வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் பண்டிகை கருதப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கடவுளாக வணங்கும் இயேசுவின் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதியை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கு கேக் மற்றும் விருந்து கொடுத்து மகிழ்வது இந்த விழாவின் சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 7 தினங்களே உள்ளன. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க கிறிஸ்தவர்கள் தயாராகி வருகிறார்கள். கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் வீடுகளில் குடில்கள் மற்றும் ஸ்டார் தோரணங்கள் அமைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகிறார்கள். மேலும் தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் வாங்கவும், கேக் வகைகளை ஆர்டர் செய்யவும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
குறிப்பாக நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம், வேப்பமூடு பகுதி, கே.பி.ரோடு, கேப் ரோடு, கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி ரோடு, மணிமேடை சந்திப்பு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, பாலமோர் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிறிய ஜவுளிக்கடைகள் முதல் பெரிய ஜவுளிக்கடைகள் வரையில் மக்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று ஜவுளிகளை தேர்வு செய்து வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.
இதேபோல் மார்த்தாண்டம் உள்ளிட்ட நகர பகுதிகளிலும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
குடில் அமைப்பதற்கு தேவையான சொரூபங்கள், வண்ண வண்ண ஸ்டார்கள், சீரியல் விளக்குகள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கிறிஸ்துமஸ் விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் கேக் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் ஏராளமானோர் திரண்டு இப்போதே தங்களுக்கு தேவையான கேக் மற்றும் இனிப்பு வகைகளை ஆர்டர் செய்து வருகிறார்கள். வசதி படைத்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவின்போது புதிய நகைகள் வாங்குவது வழக்கம். புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் நகைகள் வாங்கிக் கொடுப்பார்கள். அதனால் நகைக்கடைகளிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக தென்படுவதை காணமுடிகிறது.
களை கட்டியது
இது ஒருபுறமிருக்க கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்களில் சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் இருசக்கர வாகனம் மற்றும் கார் விற்பனை செய்யும் நிறுவனங்களும் சலுகைகள் அறிவித்துள்ளன. இதனால் இத்தகைய நிறுவனங்களிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் தற்போதே கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியுள்ளது.
Related Tags :
Next Story