கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
மண்டைக்காடு அருகே ஒழுங்காக படிக்கவில்லை என தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு அருகே ஒழுங்காக படிக்கவில்லை என தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவி
நித்திரவிளை அருகே உள்ள வாவறையை சேர்ந்தவர் ராபின் ராபர்ட் ராஜ், தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா (வயது 39). இவர்களுக்கு ஷைஜி (17) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லலிதா கணவரை விட்டு பிரிந்து மகளுடன் மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஷைஜி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
விஷம் குடித்தார்
இந்தநிலையில் ஷைஜி ஒழுங்காக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதை அவரது தாயார் லலிதா கண்டித்துள்ளார். இதனால் ஷைஜி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அன்று ஷைஜி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து லலிதா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒழுங்காக படிக்கவில்லை என தாயார் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story