வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 2 பேர் விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
பயணிகள் தீவிரமாக கண்காணிப்பு
பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் உள்பட 3 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்த 5 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
இதையடுத்து, கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதுடன், வெளிநாட்டு பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
2 பேர் தப்பி ஓட முயற்சி
இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து நேற்று பெங்களூருவுக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்களது உடைமைகள் உள்ளிட்டவை கிருமி நாசனி தெளிக்கப்பட்டும், அவர்களுக்கு கவச உடை அணிவித்தும் விமான நிலையத்தில் இருந்து பவுரிங் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து வருவதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
அந்த சந்தர்ப்பத்தில் ஊழியர்களிடம் இருந்து கொரோனா பாதித்த 2 நபர்கள் தப்பி ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீசார், 2 நபர்களையும் மடக்கி பிடித்தார்கள். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 பேரின் சளி மாதிரி பெறப்பட்டு, அவர்கள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story