கற்பழிப்பு குறித்து சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு; காங். எம்.எல்.ஏ. பகிரங்க மன்னிப்பு கேட்டார்


கற்பழிப்பு குறித்து சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு; காங். எம்.எல்.ஏ. பகிரங்க மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 18 Dec 2021 2:27 AM IST (Updated: 18 Dec 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிப்பை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சர்ச்சை கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு நாடாளுமன்றத்திலும் கடும் கண்டனம் எழுந்ததை தொடர்ந்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

பெங்களூரு:
  
கர்நாடக சட்டசபை

  கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் கடந்த 13-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசி கொண்டிருந்தனர். அப்போது பல்வேறு உறுப்பினர்கள் எழுந்து தங்களுக்கும் பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினர்.

  அப்போது சபாநாயகர் காகேரி, "இப்படி அனைவரும் எழுந்து பேச அனுமதி கேட்கிறீர்கள். நான் சொன்னாலும் அதை கேட்க மறுக்கிறீர்கள். இந்த சபையை என்னால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் பேசுவதை நான் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை வந்துள்ளது" என்று கூறி அதிருப்தி தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகரின் சர்ச்சை கருத்து

  அப்போது முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான ரமேஷ்குமார், "சமுதாயத்தில் ஒரு பேச்சு உள்ளது, அது, கற்பழிப்பு என்பதை தவிர்க்க முடியாவிட்டால் அதை படுத்து கொண்டு பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும்" என்று கூறினார்.

  இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பெண் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரமேஷ்குமாரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

கடும் எதிர்ப்பு

  முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள், மந்திரிகள் ரமேஷ்குமாரின் கருத்தை கண்டித்தனர். அவர் சபையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பல்வேறு தரப்பினரும் ரமேஷ்குமாரின் கருத்துக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

  இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நேற்று தொடங்கியது.

மன்னிப்பு கேட்டார்

  இந்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாக ரமேஷ்குமார் தாமாக முன்வந்து கூறினார். இதுகுறித்து அவர் சபையில் பேசியதாவது:-

  கற்பழிப்பு குறித்து நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து கூறவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நான் அந்த கருத்தை தெரிவித்தேன். நான் கூறிய கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எந்த கவுரவ பிரச்சினையும் இல்லை.

பெண்களை மதிக்கும் நபர்

  எனது கருத்துக்கு சிலர் ஏற்கனவே தீர்ப்பு கொடுத்துவிட்டனர். தண்டனையையும் வழங்கிவிட்டனர். நான் அந்த கருத்தை கூறும்போது உள்நோக்கத்துடன் பேசவில்லை. பெண்களை இலக்காக கொண்டும் நான் அந்த கருத்தை கூறவில்லை. நான் அந்த கருத்தை எந்த சூழ்நிலையில் கூறினேன் என்பதை சிலர் புரிந்த கொள்ளவில்லை. நான் எப்போதும் பெண்களை மதிக்கும் நபர்.

  பெண்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி அனைவரையும் மரியாதையுடன் பார்க்கிறேன். சபையின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சில உறுப்பினர்களுக்கு கூறுவதற்காக அந்த கருத்தை நான் கூறினேன். வருத்தம் தெரிவிக்கவோ அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்கவோ நான் கவுரவத்தை பார்க்கவில்லை. நான் கலாசார குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன்.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

  எனக்கும் உணர்வு பூர்வமான தொடர்புகள் உள்ளன. எனது இந்த கருத்து இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை. எனது கருத்துக்குள் உங்களையும் (சபாநாயகர்) இழுத்து வந்து விட்டுள்ளனர். இந்த விவகாரம் இத்துடன் முடிவடைய வேண்டும். பெண்கள் மீது எனக்கு அபாரமான கவுரவம், மரியாதை உள்ளது. இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை மேலும் வளர விடக்கூடாது. நான் கூறிய இந்த கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். வருத்தமும் தெரிவித்து கொள்கிறேன்.
  இவ்வாறு ரமேஷ்குமார் பேசினார்.

  அதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அஞ்சலி நிம்பால்கர் ரமேஷ்குமார் மட்டும் மன்னிப்பு கோரினால் போதாது, ஒட்டுமொத்த சபையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

காங்கிரசுக்கு இக்கட்டான நிலை

  சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் பெலகாவியில் போராட்டங்கள் மூலம் பா.ஜனதா அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ரமேஷ்குமாரின் இந்த சர்ச்சை கருத்து, காங்கிரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

  ஆளும் பா.ஜனதா கட்சி, காங்கிரசுக்கு எதிராக ரமேஷ்குமாரின் கருத்தை ஒரு ஆயுதமாக எடுத்து கொண்டு கடுமையாக தாக்கி பேசியது. ஆனால் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி விலகி கொண்டனர்.

நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது

  ரமேஷ்குமாரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து விவகாரம் நாடாளுமன்ற மக்களவையிலும் எதிரொலித்தது. இதனால் இந்த விவகாரம் நேற்று நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மக்களவையில் பா.ஜனதா உறுப்பினர்கள் ரமேஷ்குமாரின் கருத்தை கண்டித்து பேசினர். அவர் மீது காங்கிரஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

  அதுபோல் கர்நாடக மேலிட காங்கிரஸ் பொறுப்பாளரும், எம்.பி.யுமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில், ரமேஷ் குமாரின் கருத்து ஏற்புடையதல்ல. சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர் இதுபோன்ற கருத்து கூறியது சரியல்ல என்று கண்டனம் தெரிவித்தார்.

  ரமேஷ் குமாரின் இந்த கருத்துக்கு இந்திய அளவில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. இதையடுத்து அவர் கர்நாடக சட்டசபையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story