சென்னிமலை அருகே கர்ப்பிணி சாவில் திடீர் திருப்பம்: பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்
சென்னிமலை அருகே கர்ப்பிணி சாவில் திடீர் திருப்பமாக, அவரை கழுத்தை நெரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னிமலை
சென்னிமலை அருகே கர்ப்பிணி சாவில் திடீர் திருப்பமாக, அவரை கழுத்தை நெரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
கர்ப்பிணி சாவு
சென்னிமலை அருகே உள்ள எம்.பி.என். காலனி சரவணாபுரியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது28). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சுமித்ரா (24). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. சுமித்ரா 4 மாத கர்ப்பமாக இருந்தார்.
கடந்த 13-ந் தேதி சதீஷ்குமாரும், சுமித்ராவும் சென்னிமலை அருகே ஓட்டக்குளம் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றனர். அப்போது பாம்பு ஒன்று திடீரென குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி ஸ்கூட்டருடன் 2 பேரும் வாய்க்காலுக்குள் விழுந்ததாகவும், அதில் மனைவி சுமித்ரா தனது கண் முன்னே வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாகவும், தான் மட்டும் நீந்தி கரையேறி விட்டதாகவும் சதீஷ்குமார் தெரிவித்து இருந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் சென்று சுமித்ராவின் உடலை கீழ்பவானியில் வாய்க்காலில் இருந்து மீட்டனர்.
சரண்
மேலும் இதுகுறித்து சுமித்ராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னிமலை போலீசில் அவருடைய தந்தை கந்தசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுமத்ராவுக்கு திருமணம் ஆகி 8 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதாவும் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே சுமத்ராவின் கணவர் சதீஷ்குமார் திடீரென தலைமறைவானார். இதனால் சதீஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் மனைவி சுமத்ராவை கொலை செய்து விட்டதாக கூறி சதீஷ்குமார் சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரிடம் சரண் அடைந்தார். உடனே சதீஷ்குமாரை சென்னிமலை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஒப்படைத்தார்.
வாக்குமூலம்
இதைத்தொடர்ந்து சதீஷ்குமாரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் சதீஷ்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
எனக்கும், திருமணம் ஆன வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை எனது மனைவி சுமித்ரா கண்டித்தார். இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று (13-ந் தேதி) மனைவி சுமித்ராவை அழைத்துக்கொண்டு துணி துவைப்பதற்காக ஸ்கூட்டரில் ஓட்டக்குளம் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றேன். அப்போது என்னுடைய செல்போனுக்கு அடிக்கடி எனது கள்ளக்காதலி அழைத்தாள். அதனால் நான் செல்போன் அழைப்பை துண்டித்து வந்தேன். இதைக்கண்டதும், சுமித்ரா, உங்களை யார் தொடர்ந்து அழைக்கிறார்? எனக்கூறி எனது செல்போனை பிடுங்கினாா்.
கழுத்தை நெரித்து கொலை
இதனால் எனக்கும், அவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சுமித்ரா எனது செல்போனை பிடுங்கி வாய்க்கால் தண்ணீருக்குள் வீசிவிட்டார். இதனால் கோபமடைந்த நான் அவரை தாக்கினேன்.
அப்போது, சாகப்போவதாக கூறியபடி வாய்க்கால் கரைக்கு சுமத்ரா ஓடினார். நான் பின்னாடியே சென்று தடுத்து நிறுத்தி அவரை தாக்கினேன். இதனால் கீழே விழுந்ததில் சுமித்ராவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினாா். நான் உடனே சுமித்ராவின் கழுத்தை நெரித்தேன். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை வாய்க்காலுக்குள் தூக்கி வீசி விட்டேன்.
நாடகம்
மேலும் நான் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரையும் தண்ணீருக்குள் தூக்கி வீசிவிட்டு பாம்பு குறுக்கே வந்ததால் தண்ணீருக்குள் விழுந்து விட்டதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து நாடகம் ஆடினேன்.
மேலும் ஸ்கூட்டரையும், மனைவியையும் தண்ணீருக்குள் வீசிய இடத்தை காட்டாமல் வேறு இடத்தை திட்டம் போட்டு காட்டினேன். இதனால் தீயணைப்பு வீரர்களும் சம்பந்தமில்லாத இடத்தில் தேடினார்கள்.
எனது மனைவியின் சாவு குறித்து சந்தேகம் இருப்பதாக எனது மாமனார் கந்தசாமி சென்னிமலை போலீசில் புகார் கொடுத்ததால் நான் தலைமறைவு ஆனேன். எனது மனைவியின் உறவினர்களிடம் நான் சிக்கிவிட்டால் என்னை கொன்று விடுவார்கள் என்பதால் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது
இதைத்தொடர்ந்து சுமத்ரா இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சுமத்ராவை கொலை செய்ததாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அதை மறைக்க பாம்பு குறுக்கே வந்ததால் வாய்க்கால் தண்ணீருக்குள் விழுந்து மனைவி இறந்துவிட்டதாக கணவனே நாடகமாடிய சம்பம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story