அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 2:34 AM IST (Updated: 18 Dec 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருச்சி
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வினர் இணைந்து நேற்று திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கி பேசினார். புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி வரவேற்று பேசினார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலை வகித்து பேசினார்.
கண்டன கோஷம்
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்-டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரியும், கட்டுக்கடங்காத அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைத்திட வேண்டும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்திட வேண்டும். அம்மா மினி கிளினிக் திட்டத்தை தி.மு.க. அரசு மூட நினைப்பதை கைவிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மழையினால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள்
 ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, அண்ணாவி, பூனாட்சி, கே.கே.பாலசுப்பிரமணியன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர்கள் சீனிவாசன், பொன்.செல்வராஜ், ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், அ.தி.மு.க. பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story