அனைத்து பள்ளிக்கட்டிடங்களும் ஆய்வு செய்யப்படும் - கலெக்டர் விஷ்ணு
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
நெல்லை:
நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கழிவறை கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் மற்றும் டாக்டர்களிடம் தரமான சிகிச்சை அளிக்கும்படி கூறினார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பள்ளி கழிவறை கட்டிட சுற்றுச்சுவர் இடிந்த விபத்து குறித்து பொதுப்பணித்துறை மூலம் முதற்கட்டமாக ஆய்வு நடத்தினோம். அதில் கட்டிட சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இறுதிக்கட்ட ஆய்வின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறப்பு குழு அமைத்து 2 நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பள்ளிக்கூடத்துக்கு விரைந்து வந்தார். சுவர் இடிந்து விழுந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்தது மிகவும் துயரமான சம்பவம் ஆகும். மாணவர்களின் பெற்றோருக்கு எனது ஆறுதலை கூறிக்கொள்கிறேன். இடிந்து விழுந்த சுவர் அஸ்திவாரம் இல்லாத வகையில் கட்டப்பட்டு உள்ளது. இதுவே விபத்துக்கு காரணம் ஆகும்’’ என்றார்.
இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் பள்ளிக்கூட வளாகத்துக்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தினார். மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்த மாணவர்களுக்கும் ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் இறந்து விட்டனர். 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகாரின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Related Tags :
Next Story