புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான பள்ளம்
மதுரை மீனாம்பாள்புரம் புலித்தேவன் தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட முக்கிய சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் பள்ளத்தில் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக இதனை சரிசெய்ய வேண்டும்.
அபுபக்கர், மதுரை.
சுத்தம் செய்யப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் சரிவர சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
சாலையில் திரியும் மாடுகள்
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை நரசிங்கம் ரோடுகளில் தினமும் ஏராளமான கால்நடைகள் சுற்றி திரிகின்றன. மேலும் அவைகள் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நடந்து செல்லும் பொதுமக்களையும் கால்நடைகள் அச்சுறுத்துகின்றன. எனவே, சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியசாமி, யா.தேத்தாங்குளம்.
10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அனைத்து கடைகளிலும், சில்லறை வியாபாரிகளும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். வெளிஊர்களில் இருந்து சிவகாசி வரும் பொதுமக்கள் இதனால் அவதிப்படும் நிலை உள்ளது. பஸ்களிலும் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா சொர்ணசேகர், சிவகாசி.
பெயர் பலகை தேவை
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் மாநகராட்சி சார்பாக வார்டு எண்களுடன் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய தொகுதி 14-வது வார்டில் உள்ள ஆரப்பாளையம் பகுதி கோமசுபாளையம் தெருவில் பெயர் பலகை இன்னும் வைக்கப்படவில்லை. இதனால் இங்குவரும் வெளியூர் நபர்கள் முகவரி தெரியாமல் தவிக்கின்றனர். எனவே, இங்கு தெரு பெயர் பலகை வைக்கப்படுமா?
முத்துச்செல்வம், கோமசுபாளையம்.
எரியாத தெருவிளக்கு
விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதன் காரணமாக இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்களும், மாணவிகளும் இரவில் இவ்வழியாக செல்லும் போது அச்சம் அடைகின்றனர். மேலும், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அப்துல் அஜீஸ், விருதுநகர்.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே மிகவும் ேமாசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பட்டணம்காத்தான்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ராஜா, காளையார்கோவில்.
Related Tags :
Next Story