கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராம மக்கள் நேற்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராம பகுதியில் பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கும், பாதாள சாக்கடை மூலம் வரும் கழிவு நீரை சுத்திகரிக்க நிலையமும் உள்ளது.
ஆனால் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தற்போது எங்கள் கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிணற்றின் அருகே அதிகளவு கொட்டி வருகின்றனர். இதனால் குடிநீர் துர்நாற்றம் வீசுவதோடு, கலங்களாக வருகிறது. மேலும் பாதாள சாக்கடை மூலம் வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படாமல், அப்படியே வெளியே திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாய விளை நிலங்களும் பாதிக்கப்படுகிறது.
தொற்று நோய் பரவுகிறது
மேலும் குப்பைகள், கழிவுநீரால் கிராம பகுதியில் தொற்று நோய் பரவி வருகிறது. எனவே கிராமத்தில் நகராட்சி குப்பைகள் கொட்டுவதை நிறுத்தவும், கழிவுநீரை சுத்திகரிக்கவும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும், என்றனர். இது தொடர்பாக அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணியிடம் மனு கொடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நெடுவாசல் கிராம மக்கள் கூறுகையில், நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என்றனர். மேலும் நெடுவாசல் கிராம எல்லைக்கு உட்பட்ட மலையில் சட்ட விரோதமாக கல் உடைப்பவர்களையும், கல் திருடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் பெரம்பலூர் ஒன்றியம், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுவாசல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story