73 அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகள்


73 அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகள்
x
தினத்தந்தி 18 Dec 2021 3:24 AM IST (Updated: 18 Dec 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

73 அரசு பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் வகுப்பறைகள் உள்ளன.

பெரம்பலூர்:

நெல்லை சம்பவம்
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லையில் தனியார் பள்ளியில் கழிவறையின் தடுப்புச்சுவர் நேற்று இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த வகுப்பறைகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதை சமீபத்தில் கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்துள்ளனர்.
73 பள்ளிகளில் வகுப்பறைகள்
அதன் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதில், பெரம்பலூர் வட்டாரத்தில் தொடக்கப்பள்ளிகளில் 11 வகுப்பறைகளும், நடுநிலைப்பள்ளிகளில் 13 வகுப்பறைகளும், உயர்நிலைப்பள்ளிகளில் 4 வகுப்பறைகளும் உள்ளன. இதேபோல் வேப்பந்தட்டை வட்டாரத்தில் தொடக்கப்பள்ளிகளில் 13 வகுப்பறைகளும், நடுநிலைப்பள்ளிகளில் 9 வகுப்பறைகளும், ஆலத்தூர் வட்டாரத்தில் தொடக்கப்பள்ளிகளில் 9 வகுப்பறைகளும், வேப்பூர் வட்டாரத்தில் தொடக்கப்பள்ளிகளில் 11 வகுப்பறைகளும், மேல்நிலைப்பள்ளிகளில் 3 வகுப்பறைகளும் செயல்படாத நிலையில் உள்ளதால், அந்த வகுப்பறைகளும் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 73 பள்ளிகளின் வகுப்பறைகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து வெளியாகி உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபாதையில்...
இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள வகுப்பறைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வேப்பூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் சேதமடைந்து காணப்படுவதால் மாணவ-மாணவிகளுக்கு அந்த பள்ளிக்கும், கோவிலுக்கு இடையே உள்ள நடைபாதையில் சிரமத்துடன் பயின்று வந்துள்ளனர். மேலும் லேசான மழை பெய்தாலும் மாணவ-மாணவிகள் ஒதுங்க இடமில்லாததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை சம்பவத்தை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஆசிரியர்கள் தினமும் காலை 9 மணிக்கு பள்ளி திறந்த உடன் கட்டிட சுற்றுச்சுவர் மற்றும் சமையலறை மற்றும் கழிவறை கட்டிடங்களை பார்வையிட்டு உறுதி செய்த பின்பே மாணவ-மாணவிகளை பள்ளி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உடனடியாக இடிக்க வேண்டும்
குன்னம் அருகே கல்பாடி ஊராட்சியை சேர்ந்த நெடுவாசல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த கட்டிடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே விபரீதங்கள் ஏற்படும் முன்பு பள்ளிகளில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களை உடனடியாக இடித்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story