தமிழகம் முழுவதும் விற்பனையில் ஈடுபட்ட பிரபல கர்நாடக குட்கா வியாபாரி கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
தமிழகம் முழுவதும் விற்பனையில் ஈடுபட்ட பிரபல கர்நாடக குட்கா வியாபாரி கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட பிரபல கர்நாடக குட்கா வியாபாரியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குட்கா விற்பனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த 9-ந் தேதி போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான 270 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் குட்காவை கடத்தி சென்ற பவானியை சேர்ந்த சதீஷ்குமார், குமாரபாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார், மோகன்ராஜ் மற்றும் பழனிசாமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தனிப்படை அமைப்பு
இதனிடையே கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த முகமது சுகில் (வயது 30) என்பவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்காவை மொத்தமாக விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து பிரபல குட்கா வியாபாரி முகமது சுகிலை பிடிக்க திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
கர்நாடக வியாபாரி கைது
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் முகமது சுகில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பின்னர் சாம்ராஜ் நகருக்கு விரைந்த தனிப்படை போலீசார், முகமது சுகிலை மடக்கி பிடித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோருக்கு முகமது சுகில் குட்காவை மொத்த விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முகமது சுகிலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகத்தில் மொத்த விற்பனை செய்து வந்த கர்நாடக குட்கா வியாபாரி முகமது சுகிலை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் கைதான முகமது சுகிலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 50 பேர் குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story