‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மரம்
சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு காலனி 12-வது வார்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் முதல் வீதியில் சாக்கடை கால்வாயில் அரசமரத்தின் வேர் ஒன்று அடைத்துள்ளது. மேலும் இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம் என்ற நிலையில் காட்சி அளிக்கிறது. அருகில் மின்கம்பம் ஒன்றும் உள்ளது. எனவே இந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். ஆபத்தான இந்த மரத்தை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--ஊர் பொதுமக்கள், கோர்ட்டு ரோடு காலனி, சேலம்.
===
குரங்குகள் தொல்லை
சேலம் அயோத்தியாப்பட்டணம், சீலநாயக்கன்பட்டி, டி.ஆர்.அலுவலகம், டி.ஐ.ஜி. அலுவலகம் ஆகிய பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரை சேதப்படுத்துகின்றன. இதுதவிர மின் வயர்களில் தொங்குவதால் அவை சேதமாகின்றன. மேலும் வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்கின்றன. எனவே இந்த குரங்களை பிடித்து வனப்பகுதியில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சாஸ்திரி நகர், சேலம்.
===
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா செட்டிமாங்குறிச்சி கிராமம் அரசு மருத்துவமனை பின்புறம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் மதுப்பிரியர்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், பெண்கள் அந்த பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும்.
-ஹரிகிருஷ்ணன், செட்டிமாங்குறிச்சி, சேலம்.
===
வீணாகும் குடிநீர்
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கல்வடங்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காவிரி தண்ணீர்தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியின் குழாய் உடைந்து இருப்பதால் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.
---ஊர்பொதுமக்கள், கல்வடங்கம், சேலம்.
===
இருண்டு கிடக்கும் சாலை சந்திப்பு
தர்மபுரி நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ராமாக்கள் ஏரிக்கரை அருகே மதிகோன்பாளையம் பிரிவு சாலை சந்திப்பு எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இந்த சாலை சந்திப்பில் போதுமான மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் இருண்டு கிடக்கிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துகளும் நடக்கிறது. இரவு நேரங்களில் இந்த சாலை சந்திப்பு வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஏராளமான பொதுமக்கள் அந்த சாலை சந்திப்பை கடந்து செல்கின்றனர். எனவே இந்த இங்கு மின் விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சின்னசாமி, மதிகோன்பாளையம், தர்மபுரி.
===
ஆபத்தான பயணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பல்வேறு குக்கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஓசூரில் பத்தலப்பள்ளி சுற்று வட்டாரத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய மினி பஸ்களில் ஒருசிலர் பின்புறமாக ஏணிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். எனவே பயணிகளை குறிப்பிட்ட அளவு மட்டுமே பஸ்களில் அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
-பூபதி, ஓசூர்.
====
வேகத்தடை அமைக்கப்படுமா ?
நாமக்கல் பிரதான சாலையில் பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகே விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வேகத்தடை தேரோட்டத்தின் போது அகற்றப்பட்டது. தற்போது பல மாதங்கள் ஆகியும் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த வேகத்தடையின் அருகே அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-குமார், நாமக்கல்.
===
பயன்படாத தண்ணீர் தொட்டி
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கருங்கல்லூர் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி சரியான பராமரிப்பு இல்லாததால் அதன் அருகே முள் செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து புதர்கள் சூழ்ந்து காட்சி அளிக்கும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்மக்கள், கருங்கல்லூர், சேலம்.
===
தலைகீழாக கிடக்கும் குப்பைதொட்டி
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிக்குட்டப்பட்டி ஊராட்சி மன்றத்தில் போதியளவு துப்புரவு பணியாளர்கள் இல்லை. இதனால் அந்த பகுதியில் குப்பை தொட்டி தலை கீழாக கிடக்கிறது. மேலும் குப்பைகள் அள்ளாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் தொற்று நோய் ஏற்பட்டு காய்ச்சலால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி துப்புரவு பணியாளர்ளை போதிய அளவு அமர்த்தி குப்பைகளை தூர்வார செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், எட்டிக்குட்டப்பட்டி, சேலம்.
==
Related Tags :
Next Story