பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்


பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்
x
தினத்தந்தி 18 Dec 2021 8:59 PM IST (Updated: 18 Dec 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

பழனி:
புத்தாண்டு, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
தைப்பூச திருவிழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்களின் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுப்பார்கள். குறிப்பாக தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி, மதுரை, காரைக்குடி, சேலம், திருப்பூர், திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். அதேபோல் புத்தாண்டு, பொங்கல் ஆகிய நாட்களையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். அவ்வாறு பாதயாத்திரை பக்தர்களுக்காக திண்டுக்கல்-ஆயக்குடி, அலங்கியம்-பழனி இடையே தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் படையெடுப்பு
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தைப்பூச திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்தது. குறிப்பாக முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்கு பக்தர்கள் வருவது கட்டாயமாக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகை தருகின்றனர். அதேபோல் தைப்பூச திருவிழாவுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பழனி கிரிவீதியிலும், நகர் பகுதியிலும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பாதைகள் சீரமைப்பு
பக்தர்கள் வருகையை முன்னிட்டு பாதயாத்திரை பாதைகள், அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சேலம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் மயில் காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிக்கு நேற்று வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக பழனிக்கு வர முடியவில்லை. தற்போது அதன் பரவல் குறைந்துள்ளதால் பாதயாத்திரையாக வந்தோம் என்றனர்.

Next Story