1,979 பள்ளிகளில் ஆபத்தான கட்டிடம் குறித்து ஆய்வு


1,979 பள்ளிகளில் ஆபத்தான கட்டிடம் குறித்து ஆய்வு
x
தினத்தந்தி 18 Dec 2021 9:23 PM IST (Updated: 18 Dec 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,979 பள்ளிகளில் ஆபத்தான கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,979 பள்ளிகளில் ஆபத்தான கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
1,979 பள்ளிகள்
நெல்லையில் நேற்று முன்தினம் சாப்டர் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும்படி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டார். இதற்கு மாவட்டம் வாரியாக பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு இணை இயக்குனர் ஜெயக்குமார் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,979 பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்த பள்ளிகள் அனைத்தையும் ஆய்வு செய்யும்படி முதன்மை கல்வி அதிகாரி கருப்புசாமி நேற்று உத்தரவிட்டார். இதற்காக குறுவள மைய அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்ட 101 குழுக்கள் அமைக்கப்பட்டது.
ஆபத்தான கட்டிடங்கள்
இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிகளில் இடித்து அகற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கும் ஆபத்தான கட்டிடங்கள், பராமரிப்பு மேற்கொள்ள வேண்டிய கட்டிடங்கள், பள்ளிகளுக்கு புதிதாக தேவைப்படும் கட்டிடங்கள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்பட அனைத்தையும் ஆய்வு செய்தனர்.
இதில் திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளி ஆகியவற்றில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து இருந்ததை குழுவினர் கண்டறிந்தனர். அதேபோல் நகரில் பிற பள்ளிகளிலும் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதையடுத்து ஆபத்தான கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story