கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
உத்தரவு
நெல்லையில் தனியார் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியானதை அடுத்து, தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து பழுதான கட்டிடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 அரசு பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 32 அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறியதையடுத்து இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
விடுமுறை நாட்கள்
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நல்லூர், மத்திகிரி, தளி, ஜவளகிரி, அலசெட்டி, பாலதொட்டனப்பள்ளி, குந்துகொட்டாய், வேப்பனப்பள்ளி, எம்.சி.பள்ளி, சென்னசந்திரம், மகராஜகடை, பெத்தனப்பள்ளி, மணவாரனப்பள்ளி, பெரியகோட்டப்பள்ளி, சிக்கபூவத்தி உள்பட மொத்தம் 32 அரசு பள்ளிகளில் பழுதான கழிவறை, வகுப்பறை மற்றும் அலுவலக கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்தபணி நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆபத்தான சுற்றுச்சுவர்
சூளகிரியில் கோட்டை தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் விரிசலுடன், மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச்சுவரை இடித்து அகற்றி விட்டு, புதிய சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story