அரசு பள்ளி கட்டிடம் உறுதியாக உள்ளதா?


அரசு பள்ளி கட்டிடம் உறுதியாக உள்ளதா?
x
தினத்தந்தி 18 Dec 2021 10:49 PM IST (Updated: 18 Dec 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் நேற்று திடீரென்று நேரில் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் நேற்று திடீரென்று நேரில் ஆய்வு செய்தார்.
புகார்
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் வசதிக்காக ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டன. இந்த கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை என புகார் எழுந்தது. 
இதன் காரணமாக மாணவ-மாணவிகளை அந்த கட்டிடத்திற்கு படிக்க அனுப்ப பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்றன. இந்த தகவல் அறிந்த மதுரை ஐகோர்ட்டு இந்த வழக்கினை தாமாக எடுத்து விசாரித்து திருச்சி என்.ஐ.டி. நிபுணர் குழு ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. 
விசாரணை
இந்த ஆய்வு முடிவடைந்து அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு ஆய்வறிக்கையின் அடிப்படையில் பள்ளிக் கட்டிடம் நிலையாக உள்ளதாகவும், 2016-ல் பயன்பாட்டில் இருந்த குறைந்த திறன் கொண்ட கான்கிரீட் பயன்படுத்தப்பட்டதாலும், கடல் சார்ந்த பகுதி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கட்டிடம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கட்டிடத்தின் உறுதி தன்மையை கண்காணித்து வருவதாக கூறப்பட்டது. 
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கட்டிடத்தை இடித்து ஏன் புதிய கட்டிடம் கட்டக்கூடாது. கடைசியாக பராமரிப்பு எப்போது நடந்தது என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
ஆய்வு
அரசுத்தரப்பில் கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 17 ஆசிரியர்கள் பணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப அடிப்படையில் பள்ளிக்கட்டிடத்தை மேலும் பலப்படுத்த என்ன செய்யலாம் என்று என்.ஐ.டி. குழு மீண்டும் ஆய்வு செய்து ஜனவரி 19-ந் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் திடீரென்று நேரில் வந்தார். அவர் பள்ளி கட்டிடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். கட்டிடத்தின் உறுதி தன்மை, பராமரிப்பு பணி நடைபெற்றுள்ளதா, வகுப்புகள் நடைபெற தகுதியாக உள்ளதா என்று பார்வையிட்டார். மேலும், மாணவ-மாணவிகளிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பெற்றோர்களிடம் கருத்து கேட்டறிந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
உறுதித்தன்மை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் உறுதித்தன்மையுடன் கட்டப்படவில்லை. ஐகோர்ட்டு இந்த பள்ளி கட்டிடத்தின் மீது அக்கறை கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி கட்டிடம் உறுதித்தன்மையுடன் உள்ளது என ஐகோர்ட்டு உறுதி செய்து அறிவித்தால்தான் நாங்கள் மாணவ-மாணவிகளை அந்த கட்டிடத்தில் கல்வி கற்க அனுப்புவோம் என்றனர்.

Next Story