கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பழுதடைந்த பள்ளிகளில் 20 கட்டிடங்கள் இடிக்கும் பணி
கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பழுதடைந்த பள்ளிகளில் 20 கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குளித்தலை
இடிக்கும் பணி
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லையில் தனியார் பள்ளியில் கழிவறையின் தடுப்புச்சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்திலும் பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து இடிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதில், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
20 கட்டிடங்கள்
பின்னர் கலெக்டர் கூறியதாவது:- பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் என மொத்தம் 1,072 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக 18 அரசு பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இன்று (அதாவது நேற்று) இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை தெரிந்து அதற்கேற்றார் போல் நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
தொடர் நடவடிக்கை
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களை அந்த துறை சார்ந்த அலுவலர்களும், ஊரக வளர்ச்சித் துறையின் பராமரிப்பில் உள்ள கட்டிடங்களை அத்துறை சார்ந்த அலுவலர்களும் தொடர்ந்து கண்காணித்து தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) சச்சிதானந்தம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மேட்டு திருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேட்டுப்பட்டி, பஞ்சப்பட்டி, போதுராவுதன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் இருந்த பழுதடைந்த கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. இந்த தகவலை கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story