கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Dec 2021 12:25 AM IST (Updated: 19 Dec 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயில் செல்லாமல்  பஸ் நிறுத்தத்தின் வழியாக ஆண்டிமடம் செல்லும் சாலையோரத்தில் வழிந்து ஓடுகிறது. மேலும் கடைகள் முன்பு கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள்  நேற்று கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்- ஆண்டிமடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தமிழ்நாடு அரசு கொசு வளர்ப்பு திட்டம், கருவேப்பிலங்குறிச்சி என்கிற வாசகங்கள்  அடங்கிய துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தியடி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

 மேலும் கடைகளுக்கு முன்பும்  துண்டு பிரசுரங்களை ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுநீர் கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story