ஆண்களுக்கு அடுத்த இடத்தில் பெண்களை வைத்து பார்ப்பது வருந்தத்தக்கது-மதுரை ஐகோர்ட்டு கருத்து


ஆண்களுக்கு அடுத்த இடத்தில் பெண்களை வைத்து பார்ப்பது வருந்தத்தக்கது-மதுரை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 19 Dec 2021 1:25 AM IST (Updated: 19 Dec 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஆண்களுக்கு அடுத்த இடத்தில் பெண்களை வைத்து பார்ப்பது வருந்தத்தக்கது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

மதுரை,

ஆண்களுக்கு அடுத்த இடத்தில் பெண்களை வைத்து பார்ப்பது வருந்தத்தக்கது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

முன்ஜாமீன் மனு

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வீரகாந்தி. இவர், பெண் போலீஸ்காரர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை அனுப்பியதாக மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு வீரகாந்தி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பணியாற்றும் இடத்தில் பாதுகாப்பு என்பது பெண்களின் சட்டப்படியான உரிமை. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க தனிச்சட்டமும் கொண்டு வரப்பட்டது. பணியிடங்களில் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பரவலாக உள்ளது. சமீபத்தில் கூட ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை உயர் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் செய்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

தள்ளுபடி

ஐ.பி.எஸ். அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் போன்ற நிலையில் உள்ளவர்களால் எப்படி புகார் அளிக்க முடியும். வழக்குப்பதிவு செய்வதால் மட்டுமே இழிவு நீங்கிவிடாது. ஆண்களுக்கு அடுத்தபடியாகவே, பெண்களை பார்ப்பது வருந்தத்தக்கது.
மனுதாரர் வாட்ஸ்அப்பில் அனுப்பிய தகவல்களின் ஸ்கிரீன் ஷாட் விவரத்தை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் மீதான குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் உள்ளது என இந்த கோர்ட்டு கருதுகிறது. அவர் மீதான புகாரை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், தற்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story