எம்.இ.எஸ். அமைப்பை கண்டித்து கர்நாடகம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டம்
எம்.இ.எஸ். அமைப்பை கண்டித்து கர்நாடகம் முழுவதும் நேற்று கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பெலகாவி:
பெலகாவியில் வன்முறை
பெலகாவியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வன்முறையில் ஈடுபட்ட எம்.இ.எஸ். அமைப்பினர் போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்தனர். மேலும் போலீஸ் வாகனம், அரசு வாகனம் உள்பட 26 வாகனங்களில் கண்ணாடிகளை கல்வீசி நொறுங்கினர். மேலும் சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையையும் சேதப்படுத்தி இருந்தனர். இதுகுறித்து பெலகாவியில் உள்ள 3 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு ஆகி உள்ளது. இந்த நிலையில் எம்.இ.எஸ். அமைப்பினரை கண்டித்து நேற்று கர்நாடகம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு கே.எஸ்.ஆர். சர்க்கிள், எஸ்.பி.எம். சர்க்கிளில் கூடிய கன்னட அமைப்பினர் எம்.இ.எஸ். அமைப்பை கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். கோலார் காந்திசவுக்கில் கன்னட அமைப்பினர் உத்தவ் தாக்கரேயின் உருவப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உருவபொம்மை எரிப்பு
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் உத்தவ் தாக்கரேயின் உருவப்படத்திற்கு கருப்பு மை பூசி கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கலபுரகியில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சிவமொக்காவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் எம்.இ.எஸ். அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு டயர்களை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தார்வாரில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கருப்பு கொடியில் எம்.இ.எஸ். என்று எழுதி அந்த கொடியில் செருப்பால் அடித்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். பாகல்கோட்டையில் கன்னட அமைப்பினர் மோட்டார் சைக்கிள் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பை காட்டினர். இதுதவிர பெலகாவி, விஜயாப்புரா, பல்லாரியிலும் பல இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது டயர்களை எரித்தும், உத்தவ் தாக்கரேயின் உருவபொம்மையை எரித்தும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story