அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி-அமைச்சர் மூர்த்தி பேட்டி


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி-அமைச்சர் மூர்த்தி பேட்டி
x
தினத்தந்தி 19 Dec 2021 1:57 AM IST (Updated: 19 Dec 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை,
.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

திட்டங்கள்

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆரம்பப்பள்ளிகளில் கல்வி பயிலக்கூடிய மாணவச் செல்வங்களுக்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து இருக்கிறார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தி வருகிறார். இன்று (நேற்று) கூட இன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி இருக்கிறார். இந்த திட்டம் மதுரை மாவட்டத்தில் 20 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

காளை மாடுகள்

உலகளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, தமிழக அரசு சார்பில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நாட்டு காளை மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். மேலும் இந்த ஜல்லிக்கட்டினை உரிய நெறிமுறைகளை பின்பற்றி இதுவரை இல்லாத அளவிற்கு முன்னேற்பாட்டுடன் சிறப்பாக நடத்தப்படும். இந்த கால்நடை மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவர்களிடம் நாட்டு மாடுகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாட்டு பசுவின் பால் உதவியாக இருக்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார். 
முன்னதாக வீரபாண்டி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை, 2 சுத்திகரிப்பு நிலையம், இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி மையம் ஆகியவற்றையும் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நடராஜ்குமார், உதவி இயக்குனர்கள் சரவணன், ராஜா மற்றும் திருவள்ளுவன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story