சேலம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய கென்யா நாட்டை சேர்ந்த 2 பேர் கைது


சேலம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய கென்யா நாட்டை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2021 3:07 AM IST (Updated: 19 Dec 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய கென்யா நாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:
சேலம் அம்மாபேட்டை அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் துணை கமிஷனர் மாடசாமி, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வீட்டில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் வசித்து வந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கென்யா நாட்டை சேர்ந்த டேனியல் (வயது 25), சாமுவேல் (26) என்பதும், அவர்கள் சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்துவிட்டு சொந்த நாட்டுக்கு செல்லாமல் மாசிநாயக்கன்பட்டியில் வீடு வாடகை எடுத்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பதுக்கி வைத்திருந்ததால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story