பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை


பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை
x
தினத்தந்தி 19 Dec 2021 3:28 AM IST (Updated: 19 Dec 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து, நெல்லை மாநகர பகுதியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.

நெல்லை:
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் காயமடைந்து பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தின்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் காயமடைந்த மாணவர்கள் குறித்த விபரங்களை கண்டறிந்து பெற்றோர்களுக்கு தெரிவித்தார். அப்போது மாணவர்களுக்கான அடையாள அட்டை இல்லாததால் பல்வேறு சிரமங்களை அவர் உணர்ந்தார்.

இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், பஸ்களில் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்களை தடுக்கும் வகையிலும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 110 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைகண்ணன் தலைமை தாங்கி பேசினார். 

அப்போது அவர், நேற்று முன்தினம் சாப்டர் பள்ளியில் நடந்த விபத்தில் தான் பெற்ற அனுபவமும், அடையாள அட்டை மாணவர்களுக்கு இல்லாததால் பெற்றோர்களிடம் ஏற்பட்ட பதற்றத்தை குறைக்க முடியாமல் திணறிய சூழலையும் எடுத்துக்கூறினார். எனவே பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். .

மேலும் அவர் கூறியதாவது:-
பள்ளிகளுக்கு அருகே இருக்கும் போலீஸ் நிலையத்துடன் தலைமை ஆசிரியர்கள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பள்ளியோடு முடித்து விடாமல் போலீஸ் நிலையத்தின் துணை கொண்டு அந்த பிரச்சினைகளை அணுக வேண்டும். இது அந்த பிரச்சினை பெரிதாகாமல் சுமுகமான ஒரு தீர்வு ஏற்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உதவும். மேலும் பஸ் பயணங்களின்போது படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளக்கூடாது என்பது குறித்து மாணவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். 

போக்குவரத்து துறை இந்த விஷயத்தில் கூடுதல் ஒத்துழைப்பு தந்து பள்ளிகள் விடும் நேரத்தில் அதிகமான பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பள்ளி அருகே செயல்படும் கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களான கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் மாணவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த புகார் வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதுவரை நெல்லை மாநகர பகுதியில் 7.5 டன் வரை கஞ்சா பறிமுதல் செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் மற்றும் 110 பள்ளிகளில் இருந்தும் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் போக்குவரத்து பிரிவு பொறுப்பாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story