சாலைகளில் நடந்த பணிகளை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற என்ஜினீயர்களை கொண்டு ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சிக்கு தகவல் ஆணையம் பரிந்துரை
சென்னையில் உள்ள சாலைகள், மழைநீர் வடிகால்வாய்களில் நடந்த பணிகளை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற என்ஜினீயர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சாலைகள் சீரமைப்பு
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் வீ.முருகேஷ், இவர் பசுமை வழிச்சாலை- கேசவபெருமாள் பிரதான சாலை சீரமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த நடுவம், அந்த சாலையை சீரமைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பான தகவலை கேட்டு மாநகராட்சி தகவல் அதிகாரிக்கு, வீ.முருகேஷ், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தார். அதற்கு, பதில் அளிக்காததால், இழப்பீடு கேட்டு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
முக்கிய நபர்களின் வீடுகள்
இந்த புகாரை விசாரித்த மாநில தகவல் கமிஷனர் சு.முத்துராஜ், “மனுதாரரின் மனுவுக்கு சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல அலுவலரான, பொது தகவல் அதிகாரி பதில் அளிக்கவில்லை. அதனால், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.27 ஆயிரத்தை அவர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர், சென்னை மாநகராட்சிக்கு அவர் அளித்துள்ள பரிந்துரையில் கூறியிருப்பதாவது:-
ஐகோர்ட்டு நீதிபதிகள், தமிழக அமைச்சர்கள் என்று முக்கிய நபர்களின் வீடுகள் உள்ள இந்த சாலை மிக முக்கியமானது ஆகும். மனுதாரர் புகார் அளித்த பின்னர்தான், அந்த சாலையே சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த சாலையில் மழைநீர் தேங்குகிறது. அந்த சாலையில் வேகத்தடையும் சரியாக அமைக்கப்படவில்லை.
ராணுவ என்ஜினீயர்கள்
எனவே, சென்னையில் உள்ள காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்பட அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் சாலைகள், மழைநீர் வடிகால் கால்வாய்களில் நடந்த பணிகள் அனைத்தையும் ஓய்வுபெற்ற ராணுவ என்ஜினீயர்களை கொண்டு ஆய்வு செய்யவேண்டும்.
ஏற்கனவே உள்ள சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை என்றால், அந்த பணியை செய்த ஒப்பந்ததாரர்கள் அவர்களின் சொந்த பணத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதை ராணுவ என்ஜினீயர்கள் கண்காணிக்க வேண்டும். சரியாக அமைக்கப்படாத சாலைகளை, நன்றாக அமைக்கப்பட்டுள்ளது என்று சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story