அறிவியல் பூங்கா மூடியே கிடப்பதால் செயலிழக்கும் விளையாட்டு உபகரணங்கள்
திருவண்ணாமலையில் ரூ4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா பல மாதங்களாக மூடியே கிடப்பதால் விளையாட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் ரூ4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா பல மாதங்களாக மூடியே கிடப்பதால் விளையாட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பயன்பாட்டிற்கு கொண்டு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அறிவியல் பூங்கா
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரிக்கரையில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
இது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலமாக மாநில நிதி குழு, ஒன்றிய பொது நிதி, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நல நிதி, சமூக பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பூங்காவில் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்பியல், உயிரியியல் மற்றும் வான்வெளியியல் தொடர்பான அறிவியல் மாதிரி உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி இதில் விளையாட்டு உபகரணங்களும், உடற்பயிற்சி உபகரணங்களும், நடைபயிற்சிக்கான பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட அறிவியல் பூங்கா கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.
பின்னர் சில வாரங்களிலேயே கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது. ஊரடங்களில் தளர்வு செய்யப்பட்டு பூங்கா செயல்பாட்டிற்கு வந்தது.
அந்த சமயத்தில் திருவண்ணாமலை நகரம் மற்றும் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பு மக்கள் நடைபயிற்சிக்காக இதனை பயன்படுத்தினர். மேலும் விளையாட்டு உபகரணங்களில் சிறுவர், சிறுமிகளும் விளையாட்டி மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் வேண்டுகோள்
மீண்டும் கொரோனா 2-ம் அலையின் போது மூடப்பட்டது.
இதையடுத்து கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள், அணைகள் போன்றவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தொடர்ந்து நேற்று வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவியல் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களே பயன்பாட்டில் இருந்தது. பெரும்பாலான மாதங்கள் மூடப்பட்டே காணப்படுகிறது.
மாதக்கணக்கில் மூடியே கிடப்பதால் இந்த அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பழுதாகி செயலிழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் 1½ மாதங்கள் தொடர்ந்து மழை பெய்தது.
இதனாலும் உபகரணங்கள் பழுதாக வாய்ப்பு உள்ளது. கோடிக்கணக்கில் அரசு நிதியில் செலவு செய்து அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாட்டில் இல்லாமல் தொடர்ந்து பூட்டியே கிடப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உபகரணங்களை சீர் செய்து அறிவியல் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story