போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கர்நாடக பெண் மாவோயிஸ்ட் சரண். கர்நாடக அரசால் தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டவர்
கர்நாடக அரசால் தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு முன் சரண் அடைந்தார்.
வேலூர்
கர்நாடக அரசால் தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு முன் சரண் அடைந்தார்.
பெண் மாவோயிஸ்ட்
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபா என்கிற சந்தியா (வயது 45). இவர் மாவோயிஸ்ட் அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராவார். கர்நாடக மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவிற்கு உட்பட்ட பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பிற்காக பல ஆண்டுகளாக பிரபா தீவிரமாக பணியாற்றி உள்ளார்.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது சிமோகா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பிரபாவின் இருப்பிடம் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.
போலீசில் சரண்
இந்த நிலையில் அவர் மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து முழுமையாக வெளியேறி அமைதியான வாழ்வை சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்காக காவல்துறை முன்பு சரண் அடைய விரும்புவதாக திருப்பத்தூர் கியூ பிரிவு போலீசாரிடம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்பு சரண் அடைந்தார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரான இவருடைய கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். கணவர் கைது, உடல்நலக்குறைவு மற்றும் தமிழக காவல்துறை மீதான நம்பிக்கை உள்ளிட்ட பல காரணங்களால் பிரபா காவல்துறையினரிடம் சரண் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரபா சரண் அடைந்த தகவலை டி.ஐ.ஜி.பாபு, வேலூரில் நிருபர்களிடம் கூறினார். அப்போது சரண் அடைந்த பிரபாவும் இருந்தார்.
தொடர்ந்து டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு கூறுகையில், ‘‘சரண் அடைந்த பிரபா, வேலூரில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்து கொடுக்கப்படும். தமிழக அரசின் சரணடைதல் மற்றும் புனரமைப்பு கொள்கை அடிப்படையில் பிரபாவிற்கு 3 ஆண்டுகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
கர்நாடக மாநிலத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும், அந்த மாநில காவல்துறையினரிடம் இவர் ஒப்படைக்கப்பட மாட்டார். ஆனால் அங்குள்ள வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும்’’ என்றார்.
பேட்டியின்போது திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சரண் அடைந்த பெண் மாவோயிஸ்ட் பிரபா ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story