வளர்ப்பு யானை சேரனின் கண் பார்வையில் முன்னேற்றம்
வளர்ப்பு யானை சேரனின் கண் பார்வையில் முன்னேற்றம்
கூடலூர்
முதுமலையில் 7 மாதங்களாக அளித்த தொடர் சிகிச்சையில் வளர்ப்பு யானை சேரனின் கண்பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
கண்பார்வை பாதிப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு முகாமில் மசினி, பொம்மன், சங்கர், ஸ்ரீனிவாசன், சேரன் உள்பட 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்துவந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சில சமயங்களில் வளர்ப்பு யானைகள் முரண்டு பிடிப்பது உண்டு. இதனால் பாகன்கள் அதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இந்தநிலையில் கடந்த மே மாதம் வளர்ப்பு யானை சேரனை பாகன் ஒருவர் தாக்கினார். இதனால் யானையின் இடது கண் பலத்த காயமடைந்தது. தொடர்ந்து கண் பார்வை பாதிக்கப்பட்டது.
பார்வையில் முன்னேற்றம்
இதனால் சம்பந்தப்பட்ட பாகனை வனத்துறையினர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர். தொடர்ந்து கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வளர்ப்பு யானை சேரனுக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதன் காரணமாக 7 மாதங்களுக்குப் பிறகு வளர்ப்பு யானை சேரனின் கண்பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த யானை மெதுவாக நடக்க தொடங்கி உள்ளது.
தொடர்ந்து சிகிச்சை
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பல மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் வளர்ப்பு யானை சேரனின் கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story